மின்னஞ்சல்

தொலைபேசி

மின்னஞ்சல்

தொலைபேசி

அனைத்துலக ஆசிரியர் பயிற்றுனர் செயலமர்வுக்கான பகிர்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் டென்மார்க்கில் நடத்தப்பட்ட அனைத்துலக ஆசிரியர் பயிற்றுநர் செயலமர்விற்கான பகிர்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுநருக்கான செயலமர்வு செப்ரெம்பர் 26 முதல் 28 வரை டென்மார்க்கின் அஸ்சிங் நகரில் நடைபெற்றது. கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருகைதந்த வளவாளர்களும் ஆசிரியர்களும் இச்செயலமர்வில் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர்.

தமிழர் வாழும் நாடுகளில் பல்வேறு கல்விக்கழகங்கள் தாய்மொழிக்கல்வியையும் கல்வி தொடர்பான பல செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றன. ஒரே பாடத்திட்டத்தின் கீழ் தாய்மொழிக் கல்வியை முன்னெடுத்து, வளரும் தலைமுறையை ஒரே தடத்தில் வழிநடத்தும் நோக்குடன் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை நாடுகள் தோறும் உள்ள கல்விக்கழகங்களை ஒன்றிணைத்து, நூல்கள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் வளங்களை வழங்கி வருகின்றது.

காலந்தோறும் ஆசிரியர்களுக்காகச் செயலமர்வுகளை நடத்தி, கற்பித்தல் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாண்டுக்கான செயலமர்வு டென்மார்க்கில் நடைபெற்றிருந்தது. காலத்தின் தேவைக்கேற்ப கற்பித்தலில் புதிய உத்திகளையும் அணுகுமுறைகளையும் இணைத்துச்செல்வது அவசியமானது. இச்செயலமர்வின் முதன்மைக் கருப்பொருளாக தாய்மொழிக்கல்வியில் கற்பித்தல் உத்திகளும் அணுகுமுறைகளும் என்பது அமைந்தது.

செப்.26-ம் நாள் மாலை தியாக தீபம் திலீபனுடைய நினைவுகளோடு, நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன. திருமதி அருள்நிதி இராதகிருஸ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணை இணைப்பாளர் திரு கிருஸ்ணா அவர்கள் தியாக தீபத்தின் நினைவுப் பேருரை ஆற்றினார்

தொடர்ந்து 27, 28-ம் நாட்களில் பல்வேறு தலைப்புகளில் வளவாளர் பலரும் கற்பித்தல் தொடர்பான சிறப்பான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான முனைவர் சீதா லட்சுமி அவர்கள் கற்பித்தல் உத்திகள், அணுகுமுறைகள் குறித்துச் சிறந்த கருத்துகளை வழங்கினார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் திரு பௌநந்தி அமிர்தலிங்கம் அவர்களும் கற்பித்தல் உத்திகள் பற்றியும் விசேட தேவையுடைய மாணவரைப் புரிந்துகொள்ளுதலும் கையாளுதலும் என்ற விடயம் தொடர்பிலும் பயன்மிக்க பல கருத்துகளைப் பகிர்ந்தார்.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் செயற்பாட்டாளர் சாந்தினி கதிரேசு அவர்கள் நிகழ்வினை ஒழுங்கமைத்து வழங்கியதுடன் பங்காளர்களின் அறிமுகம் வரவேற்புரை செயலமர்வு தொடர்பான விளக்கங்களை வழங்கினார். மேலும் ஒன்றிணைந்த கற்பித்தல் முறை ஊக்குவித்தல் கற்றலிற்கான விருப்பத்தைத் தூண்டுதல் போன்ற முறைமைகளை வழங்கினார்.

ரொறண்ரோ பல்கலைக்கழக விரிவுரையாளரும் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளமாளருமான பொன்னையா விவேகானந்தன் புதிய கற்பித்தல் உத்திகள் வாயிலாகக் கற்றலை எவ்வாறு விளையாட்டுகள் வழியே கற்பிக்கலாம் என்பது பற்றி விளக்கமுறத் தெரிவித்தார். 

டென்மார்க் தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட உளவள வல்லுநரான திரு கதிர்காமநாதன் அவர்கள் மாணவர் உளவியலைப் புரிந்துகொண்டு வகுப்புகளை எவ்வாறு சிறப்பாக நடத்தலாம் என்பது பற்றிக் குழந்தைகளின் உளவியல், பதின்ம வயதினர் உளவியல், கற்பித்தல் உளவியல் என்ற தலைப்புகளில் சிறந்த விளக்கங்களை வழங்கினார்.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் உயர்கல்விப் பிரிவு இணைப்பாளர் முனைவர் கந்தசாமி பார்த்தீபன் அவர்கள், மேற்குலக நாடுகளில் நடைமுறையிலுள்ள மொழிகளுக்கான தமிழ்மொழிப் பாடத்திட்டம், தமிழ்மொழிக்கல்வி வரலாறு, ஈழத்தமிழர் வரலாற்றைக் கற்பித்தல் முறைமையை எவ்வாறு சிறப்புறக் கற்பிக்கலாம் என்பதுடன் ஆக்கத்திறன் மதிப்பீடு என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து வளவாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பங்காளர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

செப்.28 அன்று மாலை செயலமர்வு இனிதே நிறைவுபெற்றது.

டென்மார்க் நாட்டின் மாலதி தமிழ்க் கலைக்;கூட நிர்வாகிகளும் தன்னார்வத் தொண்டர்களும் செயலமர்வு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.